Business

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையில் அனல் பறக்கும் போட்டி!

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பிரியர்களுக்கு தீனி போடும் வகையில் புதிய வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது ஹீரோ நிறுவனம்.

எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான மோகம் இந்தியர்களிடையே தற்போது அதிகரித்து வருகிறது. பெட்ரோல் – டீசல் விலையேற்றத்தால் கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் மீது மக்கள் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர். அதற்கு ஏற்றாற்போல ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் போன்ற புதிய புதிய மாடல்கள் சந்தைக்கு வந்து வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகின்றன.

பெட்ரோல், டீசல் வாகனங்கள் உற்பத்தியில் ஆதிக்கம் செலுத்தும் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களும் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியில் இறங்கியுள்ளன. அந்த வகையில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனமும் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியில் ஈடுபட்டுள்ளது. ஹீரோ நிறுவனத்தின் போட்டி நிறுவனங்கள் எலெக்ட்ரிக் வாகனத் துறையில் ஈடுபட்டு ஒரு ஆண்டுக்கு மேலாகிவிட்ட நிலையில், இந்நிறுவனம் தற்போதுதான் அடியெடுத்து வைத்துள்ளது.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விடா (vida) என்ற பெயரில் இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை உற்பத்தி செய்து சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் ஓலா, ஒகினவா, பவுன்ஸ் போன்ற நிறுவனங்களுக்கு கடும் போட்டியை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வாகனத்தின் விலை ரூ.1.45 லட்சம் என்ற அளவில் உள்ளது.

ஹீரோ நிறுவனத்தின் விடா வி1 பிளஸ் என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 80 கிமீ வேகத்தில் செல்லக்கூடியது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 143 கிலோ மீட்டர் வரை செல்லும் திறனுடையது. அதேபோல, விடா வி1 புரோ ஸ்கூட்டர் 165 கிலோ மீட்டர் வரை செல்லக்கூடியது. இதன் விலை ரூ.1.59 லட்சம் ஆகும். விடா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை டிவிஎஸ் ஐகியூ, ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விட அதிகமாக இருந்தாலும் அதிக திறன் மற்றும் அம்சங்கள் கொண்டது என்று கூறப்படுகிறது.