விளையாட்டு

‘பயிற்சி’…தினேஷ் கார்த்திக்கை போல்ட் ஆக்கிய ஷமி: கோலி, ரோஹித், ராகுல் செயல்பட்ட விதம் இதுதான்!

பயிற்சியின்போது தினேஷ் கார்த்திக்கை முகமது ஷமி போல்ட் ஆக்கினார்.

இந்தாண்டில் நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை தொடர் அக்டோபர் 16 முதல் நவம்பர் 13ஆம் தேதிவரை நடைபெறவுள்ளது. இதற்கான அட்டவணையை ஐசிசி சமீபத்தில் அறிவித்தது.

அதன்படி, இந்திய அணி குரூப் 2 பிரிவில் இடம்பெற்றுள்ளது. அந்த பிரிவில் பாகிஸ்தான், குரூப் ஏ ரன்னர், தென்னாப்பிரிக்க அணி, வங்கதேச அணி, குரூப் பி வின்னர் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.

இந்திய அணி யாருடன் மோதும்:

இதில் அக்டோபர் 23ஆம் தேதி, இந்திய அணி தனது முதல் லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ளவுள்ளது. அடுத்து 27ஆம் தேதி குரூப் ஏ ரன்னர், 30ஆம் தேதி தென்னாப்பிரிக்க அணியையும் எதிர்கொள்ளவுள்ளது. தொடர்ந்து நவம்பர் 2, 6 ஆகிய தேதிகளில் வங்கதேசம், குரூப் பி வின்னர் அணியுடன் மோதவுள்ளது.

குரூப் 1 பிரிவில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், குரூப் ஏ வின்னர், குரூப் பி ரன்னர் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.

இந்திய அணி:

இதற்கான இந்திய அணி ஆசியக் கோப்பை 2022 தொடர் முடிந்தப் பிறகு அறிவிக்கப்பட்டது. இந்திய அணிக்குழு தற்போது ஆஸ்திரேலியாவில் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

ஷமி மீது எதிர்பார்ப்பு:

ஜஸ்பரீத் பும்ரா காயம் காரணமாக விலகிவிட்டதால், மாற்றாக முகமது ஷமி சேர்க்கப்பட்டுள்ளார். இவர் கடந்த டி20 உலகக் கோப்பை தொடருக்குப் பிறகு இந்திய அணிக்காக விளையாடியது கிடையாது. இதனால், இவர் எப்படி செயல்படப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவி வருகிறது.

ஷமி அபாரம்:

இந்நிலையில் நேற்று இந்திய அணியுடன் இணைந்துகொண்ட முகமது ஷமி, பயிற்சியிலும் ஈடுபட்டார். அப்போது தினேஷ் கார்த்திக்கிற்கு பந்துவீசிய அவர், அவரை போல்ட் ஆக்கி அசத்தினார். தினேஷ் கார்த்திக் டேர்த் மேன் திசையில் பந்தை விரட்ட முற்பட்டபோதுதான், ஷமி யார்க்கர் வீசி போல்ட் ஆக்கினார். மேலும், மற்ற பேட்டர்களுக்கு எதிராகவும் அபாரமாக பந்துவீசி அசத்தினார்.

பேட்டர்களும் அபாரம்:

அதேபோல் ரோஹித் ஷர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல் ஆகியோரும் வலைப்பயிற்சியில் சிறப்பாக செயல்பட்டனர். எக்ஸ்ட்ரா பவுன்ஸ், ஸ்விங் பந்துகளை சரியான டைமிங்கில் எதிர்கொண்டு அசத்தியதால், டி20 உலகக் கோப்பையிலும் இவர்கள் அதிரடி காட்டுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணி இன்று நடைபெறவுள்ள பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை எதிர்த்து களமிறங்க உள்ளது. இப்போட்டி இந்திய நேரப்படி இன்று காலை 9:30 மணிக்கு பிரிஸ்பேனில் துவங்கி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.