விளையாட்டு

டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி: 172 ரன்கள் அடித்தும் நியூசிலாந்து ஆஸ்திரேலியாவிடம் தோற்றது ஏன்? எங்கே சறுக்கியது?

துபாய் மண்ணில் வாணவேடிக்கை சூழ் மைதானத்தின் நடுவில், பார்ட்டி பாப்பர்ஸ் வெடித்துச் சிதற, ஷாம்பெய்னை வார்னர் உள்ளிட்ட வீரர்கள் பீய்ச்சி அடிக்க, மகிழ்ச்சி ஆரவாரத்துக்கு நடுவே ஆஸ்திரேலிய அணித்தலைவர் ஆரோன் ஃபின்ச் கோப்பையை தூக்கியபோது அவரது கால் தரையில் இல்லை.

2015 மார்ச் 29க்கு பிறகு, நான்கு ஐசிசி தொடர்களில் இறுதிப்போட்டி வரை கூட வராத ஆஸ்திரேலிய அணி இந்த முறை கோப்பையை வென்று அசத்தியுள்ளது. அதிக முறை உலகக்கோப்பையை வென்ற அணி, ஹாட்ரிக் உலகக்கோப்பையை அடித்த அணி, தொடர்ந்து இரு முறை சாம்பியன்ஸ் டிராஃபி வென்ற அணி என எத்தனையோ சாதனைகளை, யாராலும் அவ்வளவு எளிதில் முறியடிக்க முடியாத சாதனைகளை ஆஸ்திரேலியா படைத்திருந்தாலும் டி20 உலகக் கோப்பையை வெல்லவேண்டும் எனும் கனவு மட்டும் அவர்களுக்கு அவ்வளவு எளிதில் நனவாகிவிடவில்லை.

கிட்டத்தட்ட டி20 உலகக் கோப்பை தொடர் தொடங்கி 14 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இதோ இப்போது அந்த கனவு ஆஸ்திரேலியாவுக்கு நனவாகி இருக்கிறது. ஆனால், மறுமுனையில் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் உலகக்கோப்பை தொடர் ஒன்றில் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவைச் சந்தித்த நியூசிலாந்து அணி தோல்வியை தழுவியுள்ளது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணியை ஐசிசி உலகக்கோப்பை வரலாற்றில் ஒருமுறை கூட நாக் அவுட் போட்டிகளில் வெல்லாத அணியாகிவிட்டது நியூசிலாந்து.

எட்டு விக்கெட் வித்தியாசத்தில், ஏழு பந்துக்கு முன்னரே இலக்கை கடந்து தனது முதல் டி20 உலகக் கோப்பையை முத்தமிட்டுள்ளது ஆஸ்திரேலிய அணி.

இந்த உலகக் கோப்பை தொடர் தொடங்கும் முன்னர் ஐந்து தொடர்களில் தோல்வி, குறிப்பாக வங்கதேசத்திடம் 1 – 4 என படுதோல்வி, உலகக்கோப்பை பயிற்சி போட்டியில் இந்தியாவிடம் தோல்வி, சூப்பர் 12 சுற்றில் இங்கிலாந்திடம் மரண அடி, அணிசேர்க்கை, வீரர்கள் களமிறங்கும் நிலை என ஏகப்பட்ட விமர்சனங்களை தாண்டி, ரன்ரேட் புண்ணியத்தில் தப்பிப்பிழைத்து கடந்த நவம்பர் 6ம் தேதி அரைஇறுதிக்கு தகுதிப் பெற்ற ஆஸ்திரேலிய அணி, இதோ நவம்பர் 14-ம் தேதி நள்ளிரவு நெருங்கும் வேளையில் சாம்பியன் ஆகிவிட்டது.